வாக்கெடுப்பில் பங்கேற்பாரா?.. செங்கோட்டையனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் மீண்டும் சமரச பேச்சு
சென்னை: செங்கோட்டையனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் மீண்டும் சமரச பேச்சு நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதமாகவே எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஆலோசனை கூட்டங்களை செங்கோட்டையன் புறக்கணித்து வருகிறார். இதனிடையே சபாநாயகருக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று குரல் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. சபாநாயகரை பதவி நீக்கக்கோரி அதிமுக சார்பில் தாக்கல் செய்த தீர்மானத்தில் செங்கோட்டையன் கையெழுத்திட்டிருந்தார்.
இன்று காலை அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி நடத்திய ஆலோசனையை செங்கோட்டையன் புறக்கணித்தார். இபிஎஸ் உடனான எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இரண்டு முறை பங்கேற்காமல் செங்கோட்டையன் தவிர்த்தார். சட்டப்பேரவையில் தனது இருக்கை அருகே அமர்ந்துள்ள கடம்பூர் ராஜுவுடன் செங்கோட்டையன் சகஜமாக பேசிக்கொண்டிருந்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரம் நடைபெற்றபோது இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் செங்கோட்டையன் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் செங்கோட்டையன் நிலைப்பாடு என்ன? என்பது குறித்தும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற உள்ள நிலையில் செங்கோட்டையனை சமரசம் செய்ய முயற்சி நடைபெற்று வருகிறது. செங்கோட்டையனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் மீண்டும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சட்டப்பேரவையில் தொகுதிக்கான கேள்வியை கேட்ட பின்னர் எழுந்து சென்ற செங்கோட்டையனுடன் சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சட்டப்பேரவையில் உள்ள அறையில் செங்கோட்டையனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.