எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டுவதால் அதிருப்தி; சசிகலா, ஓபிஎஸ்சை அதிமுகவில் சேர்க்க செங்கோட்டையன் அழுத்தம் தர முடிவு: இன்று மனம் திறப்பது குறித்து பரபரப்பு தகவல்கள்
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டுவதால், சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கலகத்தை கட்சிக்குள்ளேயே எழுப்ப செங்கோட்டையன் முடிவு செய்துள்ளதாகவும், அவர் கட்சியில் இருந்து வெளியேற மாட்டார் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ சமீப காலமாக கருத்து வேறுபாட்டில் இருந்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் தொடர்ந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதனால், கட்சியில் செங்கோட்டையனுக்கு அளித்து வந்த முக்கியத்துவத்தை எடப்பாடி படிப்படியாக குறைத்து, முற்றிலும் ஓரங்கட்டத் தொடங்கினார்.
அதே மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கருப்பணனுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். ஈரோடு மாவட்ட ஐடி விங் மாவட்ட நிர்வாகியாக மோகன்குமாரை நியமிக்கும்படி செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆனால், அவருக்கு எதிர் அணியைச் சேர்ந்த மகேஷ்ராஜாவை நியமித்து கட்சித் தலைமை உத்தரவிட்டது. இதனால் செங்கோட்டையன் கடும் அதிருப்தி அடைந்தார். இந்நிலையில் வரும் 5ம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு மனம் திறந்து பேச உள்ளேன் என்று செங்கோட்டையான் அறிவித்தார். ஆனால், கட்சியில் தன்னை ஓரங்கட்டுவதால், கட்சிக்குள் இருந்து கொண்டே சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுக்க செங்கோட்டையன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி அவர் இன்று கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கூற முடிவு செய்துள்ளாராம். அனைவரையும் கட்சிக்குள் சேர்த்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற குழப்பத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளாராம். கட்சியில் எடப்பாடியை விட சீனியர் என்பதால், தன் மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று கருதி, இந்த திட்டத்தை அவர் கையில் எடுக்கிறாராம். தொடர்ந்து, தேர்தல் வரை இதே பிரச்னையை கட்சியின் அனைத்து மட்டத்துக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளாராம். இதனால் இன்று கட்சிக்குள் இருந்து கொண்டே இந்த புரட்சி திட்டத்தைதான் கையில் எடுக்க இருக்கிறாராம். இவருக்கு பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையும் தீவிர ஆதரவு கொடுத்து வருகிறாராம். இதனால், அதிமுகவில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருவதால் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மாஜி அமைச்சர் திடீர் சந்திப்பு
இன்று மனம் திறந்து பேச உள்ள கே.ஏ.செங்கோட்டையனை சமாதானம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி அனுப்பிய தூதுக்குழுவை செங்கோட்டையன் சந்திக்க மறுத்த நிலையில், இறுதி கட்ட பேச்சு வார்த்தைக்காக ஈரோட்டில் இருந்து முன்னாள் அமைச்சரும் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் நேற்றிரவு கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டிற்கு வருகை தந்தார். அப்போது சுமார் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய கே.வி.ராமலிங்கம் அங்கிருந்து திரும்பி சென்றார். கே.வி.ராமலிங்கம் பேசிய போதும், சசிகலா, ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரையும் ஒன்று சேர்த்து தேர்தலை சந்திக்க வேண்டும் என செங்கோட்டையன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சந்திப்பு குறித்து கேட்ட போது பதில் கூறாமலேயே கே.வி.ராமலிங்கம் சென்று விட்டார்.
எடப்பாடி சமாதான பேச்சா? செங்கோட்டையன் பதில்
கோபி அருகே உள்ள கலிங்கியத்தில் திருமண மண்டபம் திறப்பு விழாவில் நேற்று கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டைனிடம், வேறு கட்சியில் இணையப் போகிறீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘நாளை காலை (இன்று) 9.15 மணிக்கு திட்டமிட்டவாறு மனம் திறந்து பேச உள்ளேன்’ என்றார்.
தொடர்ந்து, துரோகத்தை சுமந்து செல்பவர்களுடன் கூட்டணி கிடையாது என்பதால் கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டதாக டிடிவி.தினகரன் கூறியது குறித்து நிருபர்கள் கேட்ட போது, டிடிவி.தினகரன் கூறிய கருத்துக்கு அவர் தான் பதில் கூற வேண்டும். அவரது கருத்துக்கு நான் பதில் கூறுவது பொருத்தமாக இருக்க முடியாது’ என்றார். அதே போன்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றதா? உங்களிடம் யார் யாரெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்று கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நாளை (இன்று) காலை வரை பொறுத்திருங்கள், அப்போது பதில் கூறுகிறேன் என்று கூறிச்சென்றார்.