அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெகவில் இணைவதாக தகவல்கள் வெளியான நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அவரது ஆதரவாளர்களுடன் நாளை தவெகவில் இணைய உள்ளதாக கடந்த 2 நாட்களாக தகவல் பரவியது. அதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் அவரது வீட்டின் முன்புற கதவுகள் பூட்டப்பட்டு, பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மாலையில் முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட ஆதரவாளர்கள் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து மாலை வீட்டில் இருந்து சென்னை செல்வதற்காக காரில் விமான நிலையத்துக்கு புறப்பட்டார். அப்போது, தவெகவில் இணைகிறீர்களா என நிருபர்கள் கேட்டபோது, அதை மறுக்காமல் சிரித்தவாறு சென்றார். உங்கள் மவுனம் சம்மதம் என்று எடுத்துக் கொள்ளலாமா.? என்றுமீண்டும் கேட்டபோது அப்போதும் பதில் ஏதும் சொல்லவில்லை. இதை தொடர்ந்து கோவை பீளமேடு விமான நிலையத்தில் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அதிமுக எனும் இயக்கத்திற்காக 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து, உழைத்த எனக்கு கொடுத்திருக்கக் கூடிய பரிசு உறுப்பினராக கூட இருக்கக் கூடாது என்று முறையில் நீக்கப்பட்டு இருக்கிறேன்.
இந்த மன வேதனை என்பது உங்களைப் போன்றவர்களுக்கு நன்றாக தெரியும். இதற்கு மேல் எந்த கருத்தையும் சொல்லுவதற்கு இல்லை’’ என்றார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் இணைய போவதாக கூறுகிறார்களே? என்று நிருபர்கள் கேட்டதற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் வெறும் புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்து, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதற்காக தலைமைச் செயலகம் வந்தடைந்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில், செங்கோட்டையனின் அடுத்த நகர்வு குறித்து நாளை அறிவிப்பதாக செங்கோட்டையன் தெரிவித்தார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்த நிலையில் செங்கோட்டையன் இன்று ராஜினாமா செய்தார்.