செங்கோட்டையன் பின்னாடி ஓடி வந்தவர்தான் எடப்பாடி: புகழேந்தி கலாய்
திருப்பூர்: திருப்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அதிமுக ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி புகழேந்தி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:அதிமுகவில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், செங்கோட்டையன் நாளை (இன்று) மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்துள்ளார். ஒரு காலத்தில் செங்கோட்டையன் பின்னால் எடப்பாடி பழனிசாமி நடந்து கூட வரமாட்டார். ஓடித்தான் வருவார்.
தமிழகமே செங்கோட்டையன் ஏதோ செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்துள்ளது. இதனால் தயவு செய்து அவர் விளையாடக் கூடாது. பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது, கட்சி கட்டுப்பாடு முக்கியம். இதனால் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என பூசிமொழுக கூடாது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் பயணம் செய்தால், செங்கோட்டையன் 7 முறை வெற்றிபெற்ற கோபிசெட்டிபாளையத்தில் வெற்றிபெற மாட்டார். டெபாசிட் கூட கிடைக்காது. தற்போது இந்து முன்னணி மாநாடு, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
மனம் திறந்து பேச ஒன்றும் இல்லை. அனைத்து தேர்தல்களிலும் தோல்விதான் அதிமுகவிற்கு கிடைத்து வருகிறது. சர்வாதிகாரமாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமியின் தலைமை வேண்டாம் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். எனவே இந்த முடிவை எடுத்து செங்கோட்டையன் அறிவிக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய எதிரி ஆம்புலன்ஸ். திராவிட இயக்கத்தை இன்றைய தினம் காத்து நிற்கிற இந்திய நாட்டின் தலைவராக மு.க.ஸ்டாலினை பார்க்கிறேன். விஜய்யை எதிர்த்து பேச அதிமுகவினர் பயப்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பை சந்திக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
‘பாஜவில் இருந்து அண்ணாமலை வெளியேறுவார்’
புகழேந்தி கூறுகையில், ‘‘டி.டி.வி. தினகரன் பா.ஜ கூட்டணியில் இருந்து வெளியேறியதை வரவேற்கிறேன். ஓ.பி.எஸ். வெளியேறி விட்டார். அண்ணாமலை பா.ஜ.வில் தொடரப்போவது இல்லை. பாஜவில் இருந்து விரைவில் வெளியேறுவார். இவர்கள் 3 பேரும் பேசி வைத்தது போல் தெரிகிறது’’ என்றார்.