பிரிந்து கிடக்கின்ற சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் செங்கோட்டையன், சசிகலாவை விரைவில் சந்திப்பேன்: ஓபிஎஸ் உறுதி
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளையொட்டி நேற்று சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு என்ன தேவையோ அதற்காகத்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியை நடத்தி வந்தார்கள். அந்த சாதனை மீண்டும் தொடர வேண்டும் என்றால் பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் ஒருங்கிணைந்தால்தான் அது சாத்தியமாகும் என்று மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தொண்டர்கள், தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து, நடந்து பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று அண்ணா பிறந்த நாளில் சபதம் ஏற்போம். ஒரு சாதாரண தொண்டன்கூட பொதுச்செயலாளராக வரலாம் என்று சட்டவிதி இருந்தது. அந்த விதியை இன்று காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும். தலைவர்கள் இணையவில்லை என்று சொன்னால் தொண்டர்கள் இணைந்து அதிமுகவை காப்பாற்றுவார்கள். செங்கோட்டையனிடம் நான் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அவரும் என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறார். சசிகலாவை சந்திக்கும் வாய்ப்பும் இருக்கிறது. தமிழக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் நானும் பேசிக் கொண்டிருக்கிறோம். அரசியலில் இதுவரை வந்திருப்பவர்கள், வந்து கொண்டிருப்பவர்கள் (விஜய்) அனைவரும் எம்ஜிஆர், ஜெயலலிதா தாரக மந்திரத்தைத்தான் சொல்லியாக வேண்டும். அப்போதுதான் அரசியலில் அவர்கள் வெற்றிபெற முடியும். பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட அதிமுக சட்டவிதிகள் வந்தால் அனைத்தும் சாத்தியப்படும். இவ்வாறு அவர் கூறினார்.