தமிழகத்திற்கு வர வேண்டிய செமிகண்டக்டர் ஆலை குஜராத்துக்கு மாற்றம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதிவு
சென்னை: தமிழகத்திற்கு வர வேண்டிய செமிகண்டக்டர் ஆலை குஜராத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்தியாவில் புதிதாக 4 செமி கண்டக்டர் உற்பத்தி ஆலைகள் அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக விரிவான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆலை அமைப்பதற்கு சாதகமான அம்சங்கள் இருக்கும் மாநிலங்களில் ஆராயப்பட்டன.
அதன்படி, தெலங்கானாவில் செமி கண்டக்டர் ஆலை அமைக்க முன்னணி தனியார் நிறுவனம் விண்ணப்பம் சமர்பித்துள்ளது. ஆனால் இந்த ஆலையானது ஆந்திராவிற்கு மாறியுள்ளது. இதற்கு முன்பும் இதேபோல் வலுக்கட்டாயமாக ஆலைகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. உதாரணமாக தெலங்கானாவிற்கு வர வேண்டிய செமி கண்டக்டர் ஆலையானது குஜராத் மாநிலத்திற்கு சென்றுவிட்டது. மேலும் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஆலையும் குஜராத்திற்கு கைமாறியது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.