செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு பல மாதங்களுக்கு பிறகு 50%-க்கு கீழ் சரிந்தது!
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு பல மாதங்களுக்கு பிறகு 50%-க்கு கீழ் சரிந்துள்ளது. கோடை வெப்பம் அதிகரித்துவரும் சூழலில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் அணைகளின் நிலை தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் புழல் ஏரியில் நீர்இருப்பு 2926 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 290 கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றறப்படுகிறது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 104 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 324 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 46.66% நீர் இருப்பு உள்ளது.
செம்பரம்பாக்கம் - 49.6%, புழல் - 88.67%, பூண்டி - 10.03%, சோழவரம் - 9.62%, கண்ணன்கோட்டை - 64.8% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு பல மாதங்களுக்கு பிறகு 50%-க்கு கீழ் சரிந்துள்ளது. 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில், நீர்இருப்பு 1808 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக ஏரியில் இருந்து 109 கனஅடி நீர் வெளியேற்றறப்படுகிறது.