தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் மறைவுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்!
சென்னை: தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஏ.வி.எம். நிறுவனத்தின் இயக்குநர் ஏ.வி.எம்.சரவணன் (86) வயதுமூப்பு காரணமாக காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களை ஏ.வி.எம்.நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.வி.எம்.சரவணன் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர். ஏவிஎம் ஸ்டுடியோ மூன்றாவது தளத்தில் அவர்களுக்கு இன்று மாலை 3.30 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலம் மாலை 4.00 மணியளவில் புறப்பட்டு ஏ.வி.எம். ஸ்டுடியோ பின்புறம் உள்ள மயானத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏ.வி.எம்.சரவணன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; தமிழ் சினிமாவின் மரபையும், மரியாதையையும் தன் தோள்களில் சுமந்து முன்னேற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க தயாரிப்பாளர் திரு.ஏ.வி.எம். சரவணன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
தரமும், நேர்மையும் கலந்த படைப்புகளின் மூலம் தலைமுறைகளின் மனதில் இடம்பிடித்த அன்னாரது பிரிவு தமிழ் திரையுலகினருக்கு பேரிழப்பாகும். திரு.ஏ.வி.எம். சரவணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அவரை நேசித்த அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.