இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் கே.என்.நேரு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-100, கீழ்ப்பாக்கத்தில் பேராயர் எஸ்ரா சற்குணம் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு புதிதாக பெயர் சூட்டப்பட்ட பேராயர் எஸ்றா சற்குணம் சாலை பெயர்ப் பலகையினை இன்று (18.07.2025) திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் , கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-133 மற்றும் வார்டு-141க்குட்பட்ட தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.164.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்துப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த மேம்பாலமானது, தெற்கு உஸ்மான் சாலை - பர்கிட் சாலை - மேட்லி சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை - தென்மேற்கு போக் சாலை - நியூ போக் சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை - சி.ஐ.டி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகியவற்றில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பாலம் 1200 மீ. நீளம் மற்றும் 8.40 மீ. அகலத்தில் இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், சி.ஐ.டி.நகர் பிரதான சாலையில் 140 மீ. உஸ்மான் சாலையில் ஏறுவதற்கு 120 மீ., இறங்குவதற்கு 100மீ. நீளத்தில் அணுகு பகுதிகளுடனும், இருபுறமும் 4 மீ. மற்றும் இருமுனைகளிலும் 1.5 மீ. நடைபாதைகளுடன் சேவை சாலைகள் மற்றும் 53 தூண்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது. பின்னர், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-133, தியாகராயநகர், பிரகாசம் சாலையில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் இன்று (18.07.2025) முதல் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடத்தினைப் (Gig Workers Lounge) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த தற்சார்புத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். தற்சார்புத் தொழிலாளர்கள் தங்களுக்கு இந்த ஓய்வுக்கூடம் இளைப்பாறுவதற்கும், உற்சாகமாக பணியினைத் தொடர்வதற்கும் மிகுந்த பயனுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அவர்களிடம் தெரிவித்தனர். இந்த ஓய்வுக்கூடத்தில் இருக்கை வசதிகள், கழிவறை, ஸ்மார்ட் ஃபோன் சார்ஜிங் வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள விக்டோரியா பொது அரங்கினை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இரண்டு மாடி கொண்ட இக்கட்டடத்தின் நீளம் 48 மீட்டர், அகலம் 24 மீட்டர், பிரதானக் கூரையின் உயரம் 19 மீட்டர் மற்றும் மொத்த கோபுரத்தின் உயரம் 34 மீட்டர் ஆகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இந்த விக்டோரியா பொது அரங்கின் முழுக் கட்டடத்தையும் அதன் தொன்மை மாறாமல் பழுதுபார்க்கும் பணிகள், நில அதிர்வினை தாங்கும் வகையில் மறுசீரமைப்பு பணிகள், முழு கூரையினையும் மறுசீரமைப்பு செய்யும் பணிகள், வெளிப்புறம் மற்றும் உட்புறம் மரத்தளம் மற்றும் மரப்படிக்கட்டுகளுடன் மறுசீரமைப்பு செய்யும் பணிகள், ஏற்கனவே உள்ள கட்டடத்தை தற்போதைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மேம்படுத்துதல் உள்ளிட்ட மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவற்றை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து, இதரப் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வுகளில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு (மயிலாப்பூர்), ஜெ.கருணாநிதி (தியாகராயநகர்), எஸ். இனிகோ இருதயராஜ் (திருச்சி (கிழக்கு)), மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர்கள் கூ.பி.ஜெயின், எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் வசந்தி பரமசிவம் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.