கலை பண்பாட்டுத்துறை சார்பில் பாரம்பரிய கலைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான தேர்வு
*வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது
வேலூர் : தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பாரம்பரிய கலைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான தேர்வு மற்றும் நேர்காணலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழகத்தின் பாரம்பரிய நலிவுற்ற கலைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கான பயனாளிகள் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு ஆண்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த நலிந்த தெருக்கூத்து கலைஞர்கள், நாதஸ்வர இசை உட்பட பாரம்பரிய இசைக்கலைஞர்கள், கரகாட்ட கலைஞர்கள், பொய்க்கால் குதிரை நடன கலைஞர்கள் என பாரம்பரிய நலிவுற்ற கலைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்குவதற்கான தகுதித்தேர்வு மற்றும் நேர்காணல் வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியக வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 250 பாரம்பரிய கலைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கான நேர்காணலை கலை பண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமை தாங்கி நடத்தினார். வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார்.
இதில் ஒவ்வொரு கலைஞரும் தங்களுக்கான கலைத்திறனை நிகழ்த்தி காட்டினர். இதற்கான மதிப்பீடுகளை சென்னை இசைக்கல்லூரி ஆசிரியர்கள் செய்தனர். இத்தேர்வு மற்றும் நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விரைவில் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்தார்.