சீமானின் புகைப்படத்தை கிழித்து எறிந்த நாதகவினர்
திருப்பூர்: சீமான் படத்தை நாதகவினர் கிழித்து ரோட்டில் எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள கிங்டம் திரைப்படம் ஈழ தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரித்துள்ளதாகவும் அதனை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் கூறி தமிழகம் முழுவதும் கிங்டம் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று திருப்பூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ரத்னா மனோகர் தலைமையில் கட்சியினர் கூடினர். தொடர்ந்து கோஷங்களை எழுப்பிய படி திரையரங்கிற்குள் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சியினர் வடக்கு போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் விஜய் தேவரகொண்டா படத்தை கிழித்தனர். அதோடு சேர்த்து சீமானின் புகைப்படத்தையும் கிழித்து ரோட்டில் எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை கைது செய்தனர்.