நடிகை விஜயலட்சுமி வழக்கில் மன்னிப்பு கோரினார் சீமான்: வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி: நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறு பேசியதற்காக உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி, அனைத்து குற்றச்சாட்டுகளையும் சீமான் திரும்ப பெற்றார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்திருந்தார். அதன்பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீமன்றம், வழக்கை ரத்து செய்ய முடியாது என்று, அதேப்போன்று 12 வாரத்துக்குள் போலீசார் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு கடந்த 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, நடிகையிடம் சீமான் வரும் 24ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் மீண்டும் விசாரணை வந்தது. அப்போது சீமான் தரப்பில், தனது சொல் மற்றும் செயல்களால் விஜயலட்சுமிக்கு ஏற்பட்ட எந்தவொரு வலி அல்லது காயத்திற்கும் நிபந்தனையின்றி மன்னிப்பு கோருவதாகவும், விஜயலட்சுமிக்கு எதிராக தான் கூறிய அனைத்து அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், விஜயலட்சுமி குறித்து ஊடகங்களில் எந்த கருத்தையும் தெரிவிக்கமாட்டேன் என உறுதியளிப்பதாகவும் , அதேபோல் விஜயலட்சுமியும் தனக்கு உரிய மரியாதை வழங்குவார் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து நடிகை விஜயலட்சுமி தரப்பில், சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவது தனது கண்ணித்தை மீட்டெடுக்கும் என்பதால், உச்சநீதிமன்ற அறிவுறுத்தல் அடிப்படையில் சீமான் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற தயாராக உள்ளேன்ஆனால் ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது; நான் சீமானால் பாதிப்படைந்துள்ளேன்; எனவே உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இருதரப்பும் மன்னிப்புக் கோர வேண்டும் என்பது தான் நீதிமன்றத்தின் உத்தரவு என தெரிவித்த நீதிபதிகள் சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.