சீமான், நடிகை விஜயலட்சுமி நிபந்தனையற்ற மன்னிப்பு: உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்
புதுடெல்லி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்திருந்தார். அதன்பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீமன்றம், வழக்கை ரத்து செய்ய முடியாது என்று, அதேப்போன்று 12 வாரத்துக்குள் போலீசார் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘ சீமான் தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளோம் என்றார். இதையடுத்து விஜயலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘நாங்கள் புகாரை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளோம். இதற்கு மேல் சீமான் குறித்து எதுவும் விஜயலட்சுமி பேச மாட்டார் என உறுதி அளிக்கிறோம். எங்கள் தரப்பிலும் மன்னிப்பு கேட்டு பிரமாண தாக்கல் செய்துள்ளோம் என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் சீமான் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதை அடிப்படையாக கொண்டு வழக்கை முடித்து வைக்கிறோம். முன்னதாக இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
நடிகை விஜயலட்சுமி மற்றும் சீமான் ஆகியோர் இருவரும் ஊடகங்களில் எதுவும் இதுதொடர்பாக இதற்கு மேல் எந்தவித பேட்டியோ அல்லது தகவலையோ வெளியிடக் கூடாது. மேலும் இந்த விவகாரத்தில் இருவரும் நிபந்தனையற்ற முறையில் வழக்கை வாபஸ் பெறுவதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததை அடிப்படையாகக் கொண்டு தான் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பிக்கிறது. குறிப்பாக விஜயலட்சுமியை பொருத்தவரைக்கும் அவர் பிரமாண பத்திரத்தில் தெரிவித்து இருந்த விஷயத்தை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக உத்தரவிட்டனர்.