சுரண்டை அருகே பாசி ஊரணி குளத்தின் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு
*மீட்டுத்தரக்கோரி பாசன விவசாயிகள் போராட்டம்
சுரண்டை : சுரண்டை அருகே சாம்பவர்வடகரை பாசி ஊரணி குளத்தின் நீர்வழித்தடமான வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஆவேசமடைந்துள்ள விவசாயிகள் காணோம் என குற்றம்சாட்டியுள்ளதோடு அதை மீட்டுத்தருமாறு போராட்டம் நடத்தினர்.
சுரண்டை அருகே சாம்பவர்வடகரை பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள பாசி ஊரணி குளத்தை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அத்துடன் பல்லாயிரக்கணக்கான தென்னைகளும் தண்ணீர் வசதி பெறுகின்றன.
ஆனால், கடந்த சில ஆண்டுங்களாக இக்குளத்திற்கு வரக்கூடிய நீர் வழித்தடமான வரத்து கால்வாய் சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் காணவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளதோடு அதை மீட்டுத்தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்பாநதி அணையின் 13 நம்பர் மடை திறக்கப்படும் தண்ணீரானது கள்ளம்புளி குளத்திற்கு வரும். குளம் நிரம்பி குலையநேரி குளத்திற்கு செல்லக்கூடிய உபரி நீர் கால்வாய் உள்ளது. அந்த கால்வாயிலிருந்து பாசி ஊரணி குளத்திற்கு தண்ணீர் வரக்கூடிய நீர் வழித்தடம் முழுமையாக தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பகுதியில் சைக்கிளும் விவசாயம் செய்ய முடியவில்லை தென்னை மரத்தை பாதுகாக்க விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றுகின்றனர்.
எனவே நீர் வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றி குளத்திற்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் பாசி ஊரணி குளம் மற்றும் குளத்திற்கு வரக்கூடிய நீர் வழித்தடத்தை சர்வே செய்து அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டும்.
மேலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் போது அந்தப் பகுதியில் நீர்மட்டம் உயரும் விவசாயம் செழிக்கும் என விவசாயியும் ஊர் நாட்டாண்மையுமான வெங்கடேஷ் கூறினார். மேலும் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர மாவட்ட நிர்வாக முயற்சி செய்யாவிட்டால் குடும்ப அட்டை ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைத்து தொடர் போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.