பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி தலைமைச் செயலாளரிடம் மனு அளிக்க முடிவு
விழுப்புரம்; பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி தலைமைச் செயலாளரிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் அன்புமணியை கட்சியை விட்டே நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். இந்நிலையில், கட்சியையும் சின்னத்தையும் கைப்பற்றுவதில் இரு தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாகவும், மாம்பழம் சின்னம் தங்களுக்கே சொந்தம் எனவும் அன்புமணி தரப்பு செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்திருந்தார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ராமதாஸ் தரப்பை சேர்ந்த அருள் எம்எல்ஏ தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் எந்த இடத்திலும் அன்புமணி கட்சி தலைவர் என்று குறிப்பிடவில்லை என கூறியிருந்தார். இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இப்படி இரண்டு தரப்பினரும் தேர்தல் கமிஷனில் மல்லுகட்டி வரும் சூழ்நிலையில் ராமதாஸுக்கு பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி தலைமைச் செயலாளரிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
அன்புமணி ஆதரவாளர்களால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பை அதிகரிக்க மனு அளிக்க உள்ளனர். பாமக எம்எல்ஏ அருள் மற்றும் ஆதரவாளர்கள், தலைமை செயலரிடம் மனு அளிக்க உள்ளனர். 3 காவலர்கள் பாதுகாப்புக்கு உள்ள நிலையில் காவலர்களை அதிகரிக்க பிற்பகலில் மனு அளிக்கப்பட உள்ளது.