ரகசிய ஆயுதத் தொழிற்சாலை கண்டுபிடிப்பு சட்டீஸ்கரில் நக்சல்களின் சதி முறியடிப்பு: வெடிபொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல்
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலையை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து அழித்துள்ளனர்.சட்டீஸ்கர் மாநிலத்தில் ஊடுருவி இருக்கும் நக்சல்களின் ஆதிக்கத்தை வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நக்சல்களைச் சரணடைய வைக்கும் திட்டங்களும், தீவிர தேடுதல் வேட்டைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் உள்ள கொய்மென்டா கிராமத்தின் அடர்ந்த வனப்பகுதியில், நக்சல்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருவதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுக்மா மாவட்ட காவல் படை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையின் சிறப்புப் பிரிவான ‘கோப்ரா’ படையின் 203வது பட்டாலியன் வீரர்கள் இணைந்து அந்தப் பகுதியை சுற்றி வளைத்து அதிரடித் தாக்குதல் நடத்தினர். அப்போது, அங்கு ஒரு ‘சிறிய ரக வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலை’ போல இயங்கி வந்த ஆயுத ஆலையைக் கண்டுபிடித்து அழித்தனர்.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் கூறுகையில், ‘பாதுகாப்புப் படையினர் மீது பெரிய தாக்குதல் நடத்த நக்சல்கள் திட்டமிட்டிருந்தது. குறிப்பிட்ட பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மூலம் அது தெரியவந்துள்ளது. அங்கிருந்து கையெறி குண்டு லாஞ்சர்கள், ஐ.இ.டி. வெடிகுண்டுகளின் பாகங்கள், திசைக்காட்டும் ஐ.இ.டி. குழாய்கள், டெட்டனேட்டர்கள், மரத் துப்பாக்கி கட்டைகள், சோலார் பேட்டரிகள் என பல ஆயுதங்கள் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாதுகாப்புப் படையினர் தரப்பில் எந்தவித சேதமும் இன்றி இந்த நடவடிக்கை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது’ என்றார்.