இரண்டாவது டெஸ்ட் ஆஸி ‘ஏ’ அணி 350 ரன் குவிப்பு
லக்னோ: ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நேற்று லக்னோவில் துவங்கியது. டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேம்பேல் 9 ரன்னில் வெளியேற, சாம் கோன்டாஸ் 49 ரன் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் மெக்ஸவினி பொறுப்புடன் ஆடி 74 ரன் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த ஓலிவர் பீக் 29 ரன்னுடன் வெளியேற, கூப்பர் கோன்லி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். பின்னர் வந்த பிலிப் 39 ரன் எடுத்து அவுட் ஆக, ேஜக் எட்வர்ட்ஸ் அதிரடியாக ஆடி 88 ரன்னுடன் வெளியேறினார். அடுத்து வந்த சுதர்லான்ட் 10 ரன், ரோச்சியோலி 2 ரன்னில் அவுட் ஆக அந்த அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 84 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் குவித்தது.
மர்பி 29, தோர்டான் 10 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக மானவ் சுதார் 5 விக்கெட், பிரார் 2 விக்கெட், சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.