இரண்டாம் கட்ட தேர்தல் பீகாரில் 122 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு: 4 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு; 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை
பாட்னா: பீகாரில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 6ம் தேதி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் 65 சதவீதம் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகின்றது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக 122 தொகுதிகளில் 40,073 கிராமப்புற ஓட்டுச்சாவடி உட்பட மொத்தம் 45,399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் 122 தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 3.7 கோடி வாக்காளர்கள் இன்று ஓட்டுப்போட உள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் மட்டும் 1.75 கோடி பேர். இன்றைய தேர்தலில் சுமார் 6 அமைச்சர்களும் களத்தில் உள்ளனர். நேபாள எல்லையில் உள்ள மேற்கு சம்பாரண், கிழக்கு சம்பாரண், சீதாமர்ஹி, மதுபானி, சுபால், அராரியா, கிஷன்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், மூத்த அமைச்சருமான பிஜேந்திர பிரசாத் யாதவ், எட்டாவது முறையாக சுபால் தொகுதியில் போட்டியிடுகிறார். பா.ஜவை சேர்ந்த அமைச்சர் பிரேம்குமார் 1990 முதல் தொடர்ந்து 7 முறை வென்ற கயா டவுனில் மீண்டும் களமிறங்கி உள்ளார். இதே போல் பாஜவின் ரேணு தேவி (பெட்டியா), நீரஜ் குமார் சிங் பாப்லு (சத்தாபூர்), ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் லேஷி சிங் (தம்தாஹா), ஷீலா மண்டல் (புல்பராஸ்), ஜமா கான் (செயின்பூர்) ஆகியோரும் முக்கிய வேட்பாளர்கள்.
முன்னாள் துணை முதல்வர் தர்கீஷோர் பிரசாத், தொடர்ந்து ஐந்தாவது முறையாக கதிஹார் தொகுதியில் களமிறங்கி உள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சிறு கூட்டாளிகளான ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் மாநிலங்களவை எம்பி உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளின் முக்கிய களமாக இரண்டாம் கட்ட தேர்தல் அமைந்துள்ளது. இதே போல் பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் தொடர்ந்து இரண்டாவது முறையாக குடும்பா தொகுதியில் போட்டியிடுகிறார். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்கான 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியாளர்கள் தேர்தல் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய ஆயுத காவல் படையின் 500 கம்பெனி வீரர்கள் தேர்தலுக்கு முந்தைய பணிகளில் ஈடுபட்டு இருந்த நிலையில் மேலும் 500 கம்பெனி வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். பீகார் காவல்துறையில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிற மாநிலங்களை சேர்ந்த 2000 ரிசர்வ் பட்டாலியன் வீரர்கள், பீகார் சிறப்பு ஆயுத காவல்படையின் 30ஆயிரம் வீரர்கள் 20,000 வீட்டுக்காவல் படை, 19000 காவலர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் நவ.14ஆம் தேதி எண்ணப்படும். அன்று மதியத்துக்குள் பீகாரில் புதிய ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிந்து விடும்.
* இந்தியா கூட்டணி ஆட்சி நிச்சயம்: காங்கிரஸ்
பீகாாில் இந்தியா கூட்டணி ஆட்சி நிச்சயம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகையில்,’ இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், பீகாரை 20 ஆண்டுகால உதவியற்ற ஆட்சியிலிருந்து விடுவிக்கும். அதன்பின் பீகார் இளைஞர்கள் வேலை தேடி வேறு மாநிலங்களுக்கு செல்வது நிறுத்தப்படும். இளைஞர்களின் எதிர்காலத்திலிருந்து இருள் அகற்றப்படும். ஒவ்வொரு வீட்டிலும் பிரகாசமான நாள் தொடங்கும். அநீதியை முடிவுக்குக் கொண்டுவருவோம், பீகாரை சமூக நீதியுடன் மாற்றுவோம். பீகார் மக்கள் மாநிலத்தின் முகத்தை மாற்றத் தொடங்கியுள்ளனர். பீகாரின் மகிமையை மீட்டெடுப்போம். நாங்கள் உறுதியளிக்கிறோம், அதை சாத்தியமாக்குவோம்’ என்றார்.
* 243 தொகுதிகளில் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு கடந்த 6ம் தேதி 121 தொகுதிகளில் நடந்த முதற்கட்ட தேர்தலில் 65 சதவீதம் பதிவாகி இருந்தது.
* இரண்டாவது கட்டமாக 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகின்றது. மொத்தம் 45,399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,302 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
* இரண்டாம் கட்ட தேர்தலில் 3.7 கோடி வாக்காளர்கள் இன்று ஓட்டுப்போட உள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் மட்டும் 1.75 கோடி. 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கண்காணிக்கிறார்கள்.
* தேர்தல் ஆணையத்திற்கு தேஜஸ்வி கண்டனம்
பீகார் முதல் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த வாக்காளர்களின் பாலின வாரியான தரவை தேர்தல் ஆணையம் வெளியிடாததற்கு தேஜஸ்வி விமர்சித்தார். அவர் கூறியதாவது: ஆர்ஜேடி தலைமையிலான இந்தியா கூட்டணி வாக்கு திருட்டு அல்லது நேர்மையின்மையை அனுமதிக்காது. நவம்பர் 6 ஆம் தேதி முதல் கட்ட சட்டப்பேரவை தேர்தல் முடிந்து நான்கு நாட்கள் கடந்த பிறகும் வாக்களித்த வாக்காளர்களின் பாலின வாரியான தரவை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. இது முதல் முறையாக நடக்கிறது. கடந்த காலங்களில் இது உடனடியாக வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் , உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் கூட்டு சேர்ந்து பிரச்சனையை உருவாக்க முயன்றால், அதிகாரிகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். பாஜ ஆளும் மாநிலங்களில் இருந்து பாதுகாப்புப் பணியாளர்கள் ஏன் நிறுத்தப்பட்டுள்ளனர்? நாங்கள் அவர்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். சுமார் 68 சதவீத போலீஸ் பார்வையாளர்கள் பாஜ ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அது ஏன்? உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட வெளியாட்கள் பீகாரைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள், இதை பீகார் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். பிரதமர் மோடி இங்கு தேர்தல் பிரச்சாரங்களுக்காக வந்தார், ஆனால் அவர் எதிர்மறை அரசியலில் ஈடுபட்டார்.
பீகார் தேர்தல் பிரச்சாரங்களின் போது வேலையின்மை மற்றும் இடம்பெயர்வு போன்ற முக்கிய பிரச்சினைகள் பற்றி பிரதமர் பேசவில்லை. பீகார் அரசில் இடம் பெற்றுள்ள சாம்ராட் சவுத்ரி, டாக்டர் திலீப் ஜெய்சாவல் மற்றும் மங்கள் பாண்டே ஆகியோரின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை. மேலும் குற்றச்சாட்டில் உள்ள ஹுலாஸ் பாண்டே, ஆனந்த் மோகன், சுனில் பாண்டே மற்றும் மனோர்மா தேவி போன்றவர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார். அவர்கள் நேர்மையான அரசியல்வாதிகளா? பல கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்ரீஜன் ஊழலில் முக்கிய குற்றவாளியான விபின் சர்மாவை பாட்னாவில் சந்தித்தார். இதை எல்லாம் மீறி நவம்பர் 18 அன்று நாங்கள் புதிய ஆட்சி அமைப்போம். அப்போது சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் இருக்காது. பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் குற்றவாளிகள், வகுப்புவாத சக்திகள், ஊழலுக்கு எதிராக நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு கூறினார்.