இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை தாமதமின்றி உடனே நிறைவேற்றி தர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவது, இடையில் நிறுத்தப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்குவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11 தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) கூட்டமைப்பு சார்பாக கடந்த 8ம்தேதி முதல் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
அதன் பிறகு டிட்டோ-ஜாக் உயர்மட்டக் குழு நிர்வாகிகளுடன் பள்ளி கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். ஆனால், 3 நாட்களாக போராட்டக் குழுவிடம் அரசு சார்பில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை, கோரிக்கைகள் குறித்து உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. இதனால் இன்று (12ம்தேதி) அடையாள வேலை நிறுத்தமும், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளனர். மேலும் ஜனவரி மாதம் 6ம்தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.
எனவே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் உடனடியாக தலையிட்டு ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.