இரண்டாம் நிலை காவலர் தேர்வு 2 ஆயிரத்து 122 பேர் தேர்வெழுதினர்
*தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதி
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வினை 2 ஆயிரத்து 122 பேர்கள் எழுதினர்.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 2ம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் என 3 ஆயிரத்து 644 காலிபணியிடங்களுக்கான தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இதற்கான எழுத்துதேர்வானது நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுதுவதற்கு 661 பெண்கள் உட்பட மொத்தம் 2 ஆயிரத்து 445 பேர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில் பெண்களுக்கு திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 34 தேர்வு கூடங்களிலும், வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் 45 தேர்வு கூடங்களில் 900 ஆண்களுக்கும், திரு.வி.க அரசு கலை கல்லு£ரியில் 45 தேர்வு கூடங்களில் 884 ஆண்களுக்கும் என 3 தேர்வு மையங்களில் இந்த தேர்வானது நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்து 122 பேர்கள் தேர்வு எழுதிய நிலையில் 323 பேர்கள் பல்வேறு காரணங்களால் தேர்வு எழுத வரவில்லை. மேலும் இந்த தேர்வினையொட்டி டி.ஐ.ஜி துரை தலைமையில் எஸ்.பி கருண்கரட் மற்றும் அலுவலர்கள், போலீசார் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் 9.30 மணி வரைமட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக, போலீசார், மெயின்கேட் முன்பு பணியிலிருந்து, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் உள்ளே சென்ற அனைவரையும் ஹால் டிக்கெட், கருப்புநிற பந்து முனை பேனா (ball point pen), ஆதார், லைசென்ஸ், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் எடுத்து வந்துள்ளனரா என பரிசோதனை செய்தனர். மேலும், செல்ஃபோன், கடிகாரம் மற்றும் எலக்ட்ரானிக்கல் டிவைஸ் தேர்வு வளாகத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.
மேலும், போலீசார் ”டோர் ப்ரேம் டிடெக்டர்”, ”மெட்டல் டிடெக்டர்” போன்ற கருவிகளால் தேர்வர்களை பரிசோதித்து அனுப்பினர். வளாகத்திற்குள் நுழைய கடைசி ஐந்து நிமிடம் உள்ளபோது வருகை தந்த அனைத்து தேர்வர்களையும் கல்லூரிக்கு சொந்தமான பேட்டரி வாகனத்திலும், போலீசாரின் பைக்குகளிலும் அழைத்துச் சென்று தேர்வு அறைகளில் விட்டு வந்தனர்.
தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுற்ற பின்னர் வருகை பதிவேட்டில் இடது கை பெரு விரல் ரேகையை பதிவுசெய்த பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.