இரண்டாவது நாளாக சேறு, சகதிகள் அகற்றம் குந்தா அணை சுரங்கபாதையில் ஏற்பட்ட அடைப்பு சீரமைக்கப்பட்டது
*மூழ்கிய பாலம் தெரிந்ததால் மக்கள் ஆச்சரியம்
மஞ்சூர் : குந்தா அணையில் தேங்கிய சேறு, சகதிகள் அகற்றப்பட்டு சுரங்கபாதையில் ஏற்பட்ட அடைப்பு சீரமைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள காட்டுக்குப்பை பகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தின் சார்பில் ரூ.ஆயிரத்து 850 கோடி மதிப்பீட்டில் மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்காக கடந்த 13ம் தேதி எமரால்டு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
வினாடிக்கு ஆயிரம் கன அடிநீர் வீதம் அணையில் இருந்து வௌியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குந்தா அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து கடந்த 25 நாட்களுக்கும் மேலாக குந்தா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் எமரால்டு அணை நீரில் அடித்து வரப்பட்ட கழிவுகள் மற்றும் சேறு, சகதிகள் குந்தா அணையில் தேங்கியது. மேலும் அணையின் முகப்பு பகுதியில் கெத்தை மின் நிலையத்திற்கு நீர் கொண்டு செல்லும் சுரங்கபாதையில் மரங்கள், தேயிலை செடிகள், கற்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கெத்தை மின் நிலையத்திற்கு நீர் கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து சுரங்கபாதையில் தேங்கிய கழிவுகளை அகற்ற மின்வாரிய தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை முன்னிட்டு குந்தா அணையில் மதகுகள் மூலம் தண்ணீர் வெளியேற்றபட்டு வந்தது நிறுத்தப்பட்டது.
அணையின் அடிபாகத்தில் அமைந்துள்ள ஸ்கோர் வென்ட் திறந்து விடப்பட்டு அதன் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் அணையில் தேங்கியிருந்த சேறு, சகதிகள் சீறி பாய்ந்த வெளியேறிய நீரில் கரைந்து வெளியேறியது. தொடர்ந்து இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் அணையின் முகப்பு பகுதியில் தேங்கியிருந்த சேறு, சகதிகள் பெருமளவு வெளியேற்றப்பட்டது.
சுரங்கபாதை அமைந்திருந்த பகுதியில் மரங்கள், செடி,கொடிகள், பிளாஸ்டிக் கழிவுகளும் அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து சுரங்கபாதை மூலம் கெத்தை மின் நிலையத்திற்கு தடங்கல் இல்லாமல் நீர் கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று மாலை ஸ்கோர் வென்ட் மூலம் தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது.
சுரங்கபாதையில் அடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கழிவுகளை அகற்றுவதற்காக குந்தா அணையில் இருந்து தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது குந்தா அணை தண்ணீரின்றி சேறு, சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் தண்ணீர் முழுவதுமாக வெளியேறியதால் அணை கட்டுவதற்கு முன்பு அங்கு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாலம் ஒன்று வெளியில் தெரியவந்தது. இதை குந்தா பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.