பருவம் தவறி பெய்யும் மழையால் விளைச்சல் பாதிப்பு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை
*கலெக்டரிடம் தமிழக விவசாயிகள் சங்கம் மனு
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ஏகாம்பரம், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அறிவுடைய நம்பி, தனி துணை ஆட்சியர் கீதா லட்சுமி, சிறுபான்மையினர் துறை நல அலுவலர் மீனா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ரமேஷ், மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்த ராமகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் திமிரி வட்டம், சஞ்சீவிராயன்பேட்டை வள்ளலார் தெருவை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சஞ்சீவிராயன்பேட்டையின் ஒட்டுமொத்த கழிவுநீர் இருவேறு வழிகளில் வந்து வள்ளலார் தெருவில் குட்டை போல் தேங்கியுள்ளது.
மழைக்காலங்களில் மழை நீருடன் சேர்ந்து கழிவுநீரும் கலந்து வீடுகளில் புகுந்து விடுகிறது.
இதுகுறித்து பலமுறை திமிரி பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதற்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
சோளிங்கர் தாலுகா பாணாவரம் அடுத்த ரங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல்பயிர் விவசாயம் செய்து வருகிறேன்.
எங்கள் விவசாய நிலத்தை சுற்றி சுமார் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அண்மையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த ெதாடர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
மேலும் மழை நீர் வெளியேறும் கல்வெட்டை நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர், நெல் பயிர்களில் சூழாத வண்ணம் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரக்கோணம் ஒன்றியம், அனந்தாபுரம் ஊராட்சிமன்ற தலைவர் சாந்தி சிவா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அனந்தாபுரம் ஊராட்சியில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் எங்கள் ஊராட்சியை சுற்றியுள்ள விவசாயிகள் அனைவரும் நெல் அறுவடை செய்து அதனை விற்பனை செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
எங்கள் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். இதற்கு கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
தமிழக விவசாயிகள் சங்கம் மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், ஒவ்வொரு மையத்திலும் சுமார் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஆனால் 100 விவசாயிகளிடம் இருந்து கூட நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. தொடர்ந்து பருவம் தவறி பெய்கின்ற மழையினால் விளைச்சல் பாதித்துள்ளது.
மேலும் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை திரும்ப, திரும்ப உலர்த்தினாலும் மழையினால் பாதிக்கப்படுகிறது. தற்சமயம் நெல் கொள்முதல் செய்வதில் சுனக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்த பருவம் துவங்க உள்ள நிலையில் நெல் கொள்முதல் செய்வதை இன்று முதல் நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே நெல் கொள்முதல் நிலையங்களை தொடர்ந்து செயல்பட உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதேபோல், மொத்தம் 322 மனுக்கள் றெப்பட்டன. இதனைத் தொடர்ந்து கலெக்டர் சந்திரகலா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஏரி பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு
ஆற்காடு தாலுகா அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகரன் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அரும்பாக்கம் பெரிய ஏரியிலிருந்து மதகு வழியாக வரும் பாசன கால்வாய்யை, விவசாயிகள் ஆக்கிரமித்துள்ளனர்.
இது சம்பந்தமாக கடந்த 2 வருடங்களாக பலமுறை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஏரி பாசன கால்வாய்யை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீர் செய்து தர வேண்டும். இம்மனு மீது கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.