கூந்தன்குளத்தில் சீசன் துவங்குவதால் பறவைகள் சரணாலய குளக்கரை சீரமைப்பு
நெல்லை : கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் இனப்பெருக்க சீசன் துவங்குவதால் குளத்தில் தண்ணீர் கசிவு ஏற்படும் பகுதிகளில் கரைகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் நீர்வாழ் பறவைகள் சரணாலயம், கூந்தன்குளத்தில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் கூந்தன்குளம், காடன்குளம் என இயற்கையாக அமைந்துள்ள குளத்தின் நீர்ப்பரப்பில் 129 ஏக்கரில் பறவைகள் சரணாலயம் உள்ளது.
இந்த இரு குளங்களுக்கும் மணிமுத்தாறு அணையில் இருந்து திறக்கப்படும் கால்வாய் மூலம் தண்ணீர் வந்து சேருகிறது. கடந்த மாதத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக செய்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் 100 அடியை தாண்டி காணப்படுவதால் மணிமுத்தாறு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் போது கூந்தன்குளத்துக்கு வந்து சேரும்.
இந்த சரணாலயத்திற்கு சைபீரியா, மியான்மர், ஐரோப்பிய நாடுகளில் இருந்து அரிவாள் மூக்கன், ஊசிவால் வாத்து, பட்டதலை வாத்து, கரண்டிவாயன், செங்கால்நாரை, பாம்புதாரா, வெள்ளை ஐஸ்பீஸ், கிங்பிஷர்ஸ், பெலிகான், கிரேட்டர் பிளமிங்கோ, கிரே பெலிகன்ஸ் உள்பட 43 வகையிலான வெளிநாட்டு பறவைகள் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வந்து தங்கி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து பிறகு தாய்நாட்டிற்கு திரும்பி செல்கின்றன. இப்பகுதியை அரசு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து பறவைகளை பாதுகாத்து வருகிறது.
அதேநேரத்தில் இப்பகுதி மக்களும் தங்களை நாடி அடைக்கலம் புகுந்துள்ள பறவைகளை பாதுகாப்பதில் அக்கறையுடன் கவனித்து வருகின்றனர். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இப்பகுதி மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை. இந்த பறவைகளை பார்த்து செல்வதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூந்தன்குளத்துக்கு பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் வந்து கண்டுகளித்து செல்கின்றனர்.
வெளிநாட்டு பறவைகள் மற்றும் உள்நாட்டு பறவைகள், கூந்தன்குளத்தில் கூடுகட்டி வசிப்பதற்கு ஏற்ற வகையில் இந்த குளத்தில் உள்ள மரங்களை சுற்றிலும் தண்ணீர் நிறைந்து காணப்படும். இதற்காகத் தான் வெளிநாட்டு நீர்வாழ் பறவைகள் பருவமழை சீசன் காலத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளத்திற்கு படையெடுத்து வருகின்றன.
தற்போது பருவமழை காலம் என்பதால் அணைகளில் தண்ணீர் திறக்கும்போது குளத்தில் தண்ணீர் நிரம்பி குளக்கரைகளில் கசிவு ஏற்படும் பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கூந்தன்குளம் பறவைகள் சரணாலய குளக்கரையில் தண்ணீர் கசிவு பகுதிகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது சரணாலயத்துக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டு பறவைகள் படையெடுத்து வந்து கூடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.