மானாமதுரை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை
மானாமதுரை: நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி, மானாமதுரை ரயில் நிலையத்தில் போலீசார் தீவீர சோதனை செய்தனர். மேலும், ரயில் தண்டவாளங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வடமாநிலங்கள் மற்றும் கேரளாவில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மானாமதுரை வழியாக ராமநாதபுரம், மண்டபம் வந்து செல்லும் ரயில்களை ரயில்வே போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். இதன்படி மானாமதுரை ரயில் நிலையத்தில் போலீசார் பயணிகள் உடைமைகள், பார்சல்களை சோதனை செய்தனர்.
சந்தேகப்படும்படி யாரேனும் சுற்றித்திரிந்தால், உடனே தகவல் தெரிவிக்க பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தியுள்ளனர். டெல்லிக்கு பார்சல்கள் அனுப்புவது நாளை வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற ஊர்களுக்கான பார்சல்கள் ஆய்வுக்கு பின்னரே அனுப்பி வைக்கின்றனர். ரயில் பயணிகள் நுழைவுவாயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ரயில் வரும் வைகை ஆற்றுப்பாலத்தில் எஸ்ஐ தனுஷ்கோடி தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.