மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்
மாமல்லபுரம்: வங்காள விரிகுடா கடலின் மத்திய மேற்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாமல்லபுரம் முதல் புதிய கல்பாக்கம் வரை இன்று காலை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரை பகுதியிலேயே படகுகளை கயிறு கட்டி பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், மீன்பிடி வலைகளை பாதுகாப்பான இடத்தில் மீனவர்கள் வைத்துள்ளனர். கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வங்க கடலின் மேற்கு திசையை நோக்கி இன்று காலை 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், மாமல்லபுரம் கடல் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக அலைகளின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. மாமல்லபுரம், கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடில்களுக்குமேல் போடப்பட்டிருந்த துணி பந்தல்களும் காற்றில் கிழிந்து அந்தரத்தில் பறக்கிறது. மாமல்லபுரம் கடற்கரைக்கு இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் மக்களில் பலர், பலத்த காற்று வீசியதால் வீடுகளுக்கு அவசர அவசரமாக திரும்பினர். இதனால் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.