கடல் நீர் புகுந்து உப்பாக மாறியதால் கடலோர கிராமங்களில் தரிசு நிலமாக மாறிய வயல்கள்
*அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
மயிலாடுதறை : கொள்ளிடம் அருகே கடலோர கிராமங்களில் கடல் நீர் புகுந்து உப்பாக மாறியதால் வயல்கள் தரிசு நிலமானது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடற்கரையோர கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இருபோக சாகுபடி நடைபெற்று வந்தது. ஆனால் காலப்போக்கில் படிப்படியாக குறைந்து நிலங்கள் தரிசாக மாறிக்கொண்டிருக்கிறது.
20 வருடங்களுக்கு முன்பு கொள்ளிடம் கடைமடை பகுதியில் வாய்க்கால் பாசனத்தின் மூலம் தண்ணீர் இறுதி வரை சென்று பாய்ந்தது. இதனால் இரு போக சாகுபடி ஏதுவாக நடந்து கொண்டிருந்தது. அப்போது உரிய காலங்களில் பருவ மழை போதிய அளவுக்கு பெய்தது. மேலும் உரிய நேரத்தில் மழை பெய்து வந்ததால் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி மற்றும் குள்ளகார் சாகுபடியையும் மேற்கொள்ள முடிந்தது. ஆனால் காலப்போக்கில் ஏற்பட்ட இயற்கை சீற்றம், பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் போனது. ஒரே நேரத்தில் அதிக மழை பெய்தது. மேலும் கால போக போக மழை குறைய ஆரம்பித்தது.
கொள்ளிடம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் கொள்ளிடம் ஆற்று நீர் உப்பு நீராக மாறிவிட்டதால் நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறியது. இதனால் நிலத்தடி நீரை மின் மோட்டார் மூலம் எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. வாய்க்கால் மூலம் தண்ணீர் கொள்ளிடம் கடைமடை பகுதி வரை உரிய காலத்தில் சென்று சேர முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் சாகுபடி நிலங்களின் எண்ணிக்கை மேலும் மேலும் குறைய ஆரம்பித்தன. மேலும் ஆற்றின் கரையோர செழுமையான நிலங்கள் உப்பு நீர் புகுந்து நிலங்கள் உப்பு நிலமாக மாறி உள்ளதால் பயிர் சாகுபடி நிறுத்தப்பட்டுள்ளது. கொள்ளிடம் கடைமடை பகுதியில் மட்டும் கடந்த 20 வருட காலங்களில் சுமார் 5000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெற்பயிர் சாகுபடி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
பயிர் செய்யப்பட்ட செழுமையான நிலங்கள் இன்று தரிசு நிலங்களாக காட்சி அளிக்கின்றன.தமிழக அரசு கடந்த 2023ம் ஆண்டு தரிசு நில மேம்பாட்டு திட்டத்தை கொண்டு வந்ததால் கொள்ளிடம் வட்டாரத்தில் மட்டும் சுமார் 50 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அவைகளை அரசின் மானிய உதவியுடன் மேம்படுத்தும் பணியும் நடைபெற்றது. ஆனால் அந்த பணி தொடர்ந்து நடைபெறாமல் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொள்ளிடம் கடைமடை பகுதி விவசாயிகள் கூறுகையில், கொள்ளிடம் கடைமடை பகுதியில் உப்பு நீர் புகுந்து வருவதாலும், கொள்ளிடம் ஆற்றில் உப்பு நீர் புகுந்து விட்டதாலும் ஆறு மற்றும் கடற்கரை ஓரமுள்ள நிலங்கள் தரிசாக மாறியுள்ளன. எனவே அரசு தரிசு நில மேம்பாட்டு திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்தி செழுமையான நிலங்களாக மாற்றி பழைய முறைப்படி மீண்டும் நெற்பயிர் சாகுபடி துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.