அர்ஜூனன் தபசு சிற்பம் அருகே மொபெட்டில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு
மாமல்லபுரம்: மாமல்லபுரம், அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர், தனது சொந்த பயன்பாட்டுக்கு மொபெட் வைத்துள்ளார். இந்நிலையில், இவர் நேற்று தனது மொபெட்டை அர்ஜூனன் தபசு சிற்பம் அருகே தலசயன பெருமாள் கோயில் மதில் சுவரை ஒட்டி நிறுத்திவிட்டு கடைக்கு பொருட்களை வாங்க சென்றிருந்தார். பின்னர் அவர் வீடு திரும்ப மொபெட்டை எடுத்தபோது, அதற்குள் ஒரு கட்டுவிரியன் பாம்பு புகுந்திருப்பதை கண்டு அலறி சத்தம் போட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் இன்பராஜ், முதன்மை தீயணைப்பாளர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் இருசக்கர வாகன மெக்கானிக் ராஜா, கமல் ஆகியோரின் உதவியுடன் மொபெட்டில் ஒவ்வொரு பாகமாக தீயணைப்பு வீரர்கள் கழற்றினர். அதில் ஒரு பாகத்தில் இருந்து சுமார் ஒரு அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு வெளியே சீறிப் பாய்ந்தது. அப்பாம்பை சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். பின்னர் அப்பாம்பை அங்குள்ள காட்டில் கொண்டு சென்று விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.