விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனை அடியொற்றி, மேலும் பல மாணவர்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை :எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களை அடியொற்றி, மேலும் பல மாணவர்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் என அவரது நூற்றாண்டில் கோரிக்கையாக முன்வைக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுப் பசியாற்றிய மானுடநோக்கு கொண்ட அறிவியலாளர் 'பாரத ரத்னா' எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்தநாள் இன்று!தமது அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களது பெயரிலான ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு நிலம் வழங்கி, குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன் அவர்களுடன் இணைந்து, அங்குள்ள JRDTata சுற்றுச்சூழல் தொழில்நுட்ப மையத்தைத் திறந்தும் வைத்தார் அன்றைய முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள்.
அவரது வழியிலான நமது திராவிடன் மாடல் அரசும், போரூர் Wetland Park, தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி ஆகியவற்றுக்குத் திரு. எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களது பெயரைச் சூட்டியுள்ளதோடு,பயிர்ப் பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவருக்கு எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்து அவரது நினைவைப் போற்றி வருகிறோம். Climate Change உட்பட இன்று நாம் எதிர்கொண்டு வரும் பல சவால்களைப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே கணித்து, எச்சரித்த மாபெரும் தொலைநோக்காளரான திரு. எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களை அடியொற்றி, மேலும் பல மாணவர்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் என அவரது நூற்றாண்டில் கோரிக்கையாக முன்வைக்கிறேன்!"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.