கும்பகோணத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மோதல்; மரக்கட்டையால் தாக்கியதில் பிளஸ் 2 மாணவன் மூளைச்சாவு: 15 பேர் கைது
கும்பகோணம்: அரசு பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மரக்கட்டையால் தாக்கியதில் 12ம் வகுப்பு மாணவன் மூளைச்சாவு அடைந்தான். இது தொடர்பாக 15 மாணவர்களை போலீசார் கைது செய்து சிறார்கள் சிறையில் அடைத்தனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் 12 மற்றும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக மாணவர்களுக்குள் இந்த பிரச்னை நடந்து வருகிறது. பள்ளி நிர்வாகம் இரு வகுப்பு மாணவர்களையும் அழைத்து அறிவுரை கூறி எச்சரித்துள்ளனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, இனாம்கிளியூர் வடக்கு தெருவை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவனுக்கும், 11ம் வகுப்பு மாணவனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது காவல் நிலையம் வரை சென்றதால் இருவரின் பெற்றோர்களை வரவழைத்து போலீசார் கண்டித்து அனுப்பி உள்ளனர்.
கடந்த 3ம் தேதி மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி கழிவறையில் 12ம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது நண்பர்களுடன் செல்லும்போது 11ம் வகுப்பு மாணவர்கள் இடித்துக்கொண்டதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்து நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்தபின் பட்டீஸ்வரம் தேரோடும் கீழ வீதியில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 11ம் வகுப்பை சேர்ந்த 14க்கும் மேற்பட்ட மாணவர்கள், மரக்கட்டையால் 12ம் வகுப்பு மாணவனை தாக்கி உள்ளனர். இதில் மாணவன் மண்டை உடைந்து மயங்கி கீழே விழுந்தார். அப்பகுதி மக்கள் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கண்டித்தனர். பின்னர் 11ம் வகுப்பு மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
படுகாயம் அடைந்த மாணவனை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் பரிசோதித்து பின் மண்டையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறியதால், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவன், மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாணவனின் தாயார் கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட 11ம் வகுப்பு மாணவர்கள் 15 பேரை கைது செய்து, தஞ்சாவூர் சிறார்கள் சிறையில் அடைத்துள்ளனர்.