காதலிக்க மறுத்த பள்ளி மாணவி குத்திக்கொலை: ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் ஒருதலை காதலன் சரண்; உறவினர்கள் தாக்க முயன்றதால் போலீசுடன் தள்ளுமுள்ளு, மறியல்
ராமேஸ்வரம்: காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ராமேஸ்வரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரணடைந்த வாலிபரை காவல்நிலையத்திற்குள் புகுந்து உறவினர்கள் தாக்க முயன்றனர். அப்போது உறவினர்களுக்கும், போலீசுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டையை சேர்ந்த மீனவர் மாரியப்பன். இவரது மகள் ஷாலினி (17) ராமர் தீர்த்தம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் முனியராஜ் (21). இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். முனியராஜ் மாணவி ஷாலினியை கடந்த 2 வருடமாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஷாலினி பள்ளிக்கு செல்லும்போது அடிக்கடி பின்தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் ஷாலினி காதலை ஏற்கவில்லை. தனது காதலின் ஆழத்தை வெளிப்படுத்த எண்ணிய முனியராஜ், இடது மார்பில் ஷாலினியின் பெயரை பச்சை குத்தியுள்ளார். பள்ளிக்கு செல்லும் போது தான் குத்திவந்த பச்சையை காட்டி, உண்மையாக காதலிப்பதாக உருகிப் பேசி டார்ச்சர் செய்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. எனவே முனியராஜை பார்ப்பதையே ஷாலினி தவிர்த்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த முனியராஜ் 3 நாட்களுக்கு முன்பு ஷாலினியின் வீட்டிற்கு சென்று, தன்னிடம் பேச சொல்லுமாறு அவரது பெற்றோரிடம் சண்டை போட்டதாக தெரிகிறது. இதையறிந்த உறவினர்கள், ஷாலினியை தொந்தரவு செய்யக்கூடாது என முனியராஜை கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதனால் முனியராஜ் மேலும் ஆத்திரமடைந்தார். நேற்று காலை ஷாலினி வழக்கம்போல் வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றார்.
அப்போது பின்தொடர்ந்து வந்த முனியராஜ், ‘‘உன்னிடம் கடைசியாக பேச வேண்டும்’’ எனக் கூறி தடுத்து நிறுத்தினார். அப்போது, ‘‘நான் பள்ளிக்கு செல்ல வேண்டும். பேச முடியாது’’ என்று ஷாலினி மறுத்துப் பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முனியராஜ், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஷாலினியின் கழுத்தில் குத்திவிட்டு தப்பியோடி விட்டார். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த ஷாலினி துடிதுடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவரை உடனடியாக மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஷாலினி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்ட ஷாலினியின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.
இதனிடையே கொலை செய்துவிட்டு தப்பியோடிய முனியராஜ், ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையறிந்த ஷாலினியின் பெற்றோர், உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். முனியராஜை தாக்குவதற்காக ஆவேசத்துடன் காவல் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் காவல்நிலைய வாசலில் பெரும் பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து முனியராஜை, தங்களிடம் ஒப்படைக்க கூறி அரசு மருத்துவமனை முன்பு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டது. ஏஎஸ்பி மீரா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிக்கு கடும் தண்டனை பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து மருத்துவமனைக்குள் சென்றனர். இதையடுத்து, முனியராஜ் மீது துறைமுக போலீசார் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.