பள்ளி மாணவர்கள் மத்தியில் தனியார் கோச்சிங் சென்று படிப்பது சகஜமாகி உள்ளது: ஒன்றிய அரசின் ஆய்வில் தகவல்
புதுடெல்லி: தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (என்எஸ்எஸ்) கீழ் கல்வித் திறன் குறித்த விரிவான ஆய்வு நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கையை ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் 52,085 வீடுகள் மற்றும் 57,742 மாணவர்களிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் கல்வி வழங்குவதில் அரசுப் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மொத்த மாணவர் சேர்க்கையில் 55.9 சதவீதம் அரசு பள்ளிகளில் நடக்கிறது. நகர்ப்புறங்களுடன் (30.1 சதவீதம்) ஒப்பிடும்போது, கிராமப்புறங்களில் மூன்றில் இரண்டு பங்காக (66.0 சதவீதம்) மாணவர்கள் சேர்க்கை அரசுப் பள்ளிகளில் அதிகளவில் உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் 31.9 சதவீத மாணவர் சேர்க்கையை கொண்டுள்ளன. இந்த கல்வியாண்டில் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் (27.0 சதவீதம்) தனியார் கோச்சிங்கில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இந்தப் போக்கு கிராமப்புறங்களை விட (25.5 சதவீதம்) நகர்ப்புறங்களில் (30.7 சதவீதம்) அதிகமாகக் காணப்படுகிறது. நகர்ப்புறங்களில் ஒரு மாணவருக்கு தனியார் கோச்சிங்கிற்கான சராசரி ஆண்டு செலவு (ரூ. 3,988) கிராமப்புறங்களை விட (ரூ. 1,793) அதிகமாக இருந்தது.
மாணவர்களில் 95 சதவீதம் பேர் பள்ளிக் கல்விக்கான பணத்தின் முதல் முக்கிய ஆதாரம் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து வந்ததாகக் கூறினர். இது கிராமப்புற (95.3 சதவீதம்) மற்றும் நகர்ப்புற (94.4 சதவீதம்) ஆகிய இரு பகுதிகளிலும் சீராக உள்ளது. 1.2 சதவீத மாணவர்கள் மட்டுமே முக்கிய நிதி ஆதாரமாக அரசு உதவித்தொகை இருப்பதாகக் கூறினர்.