பெற்றோர் இல்லாமல் வாடும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.11.17 கோடி ஒதுக்கீடு
சென்னை: பெற்றோரை இழந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்துக்காக ரூ.11 கோடியே 17 லட்சம் நிதியை பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ மாணவியரின் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்தாலோ, நிரந்தர உடல் செயல்பாடு இழந்தாலோ அவர்களுக்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்கும் திட்டம் உள்ளது.
தற்போது, இதற்காக ரூ.11 கோடியே 17 லட்சம் நிதியை பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து கடந்த 1.10.2025ம் தேதி வரை பெறப்பட்ட 810 விண்ணப்பங்களுக்கு ரூ.5 கோடியே 94 லட்சம் காப்பீடு சார்ந்த மணவர்களுக்காக பெற்று வழங்கப்பட்டது. மேலும், இந்த நிதியாண்டில் ரூ.5 கோடியே 23 லட்சம் தொகை மீதம் உள்ளது. பெற்றோர்களை இழந்து வாடும் மாணவ, மாணவிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 அல்லது ரூ.75,000 நிதி வழங்கப்படும். இதற்கான மாணவர்கள் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.