பள்ளி மாணவர்களுக்கான மன்றப் போட்டிகள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை: அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக இலக்கிய மன்றம், வினாடி வினா, சிறார் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு மன்றங்கள் செயல்படுகின்றன. இந்த மன்றங்கள் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும்.
அதன்படி மாவட்ட அளவிலான மன்ற போட்டிகள் அக்டோபர் 7முதல் 9ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. அதில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை அக்டோபர் 10ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களின் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் கட்டாயமாக பெறவேண்டும்.
மாவட்ட அளவில் முதல் 3 வெற்றியாளர்களை போட்டிக்கான நடுவர் குழு தேர்வு செய்ய வேண்டும். இந்த போட்டிகளை நடத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த நிதியை மதிய உணவு, ஒலி-ஒளி அமைப்பு, மாணவர்களுக்கான பயணப்படி, சான்றிதழ் வழங்குதல் போன்றவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகளை திட்டமிட்டு நடத்த வேண்டும். மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் மாணவர்கள் மாநிலப் போட்டிகளுக்கு தகுதி பெறுவர். இதில் வெற்றி பெறுவோர் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.