கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீமதி 2022 ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து அப்பள்ளி வளாகத்தில் இவரது மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய கலவரத்தில் பள்ளி சூறையாடப்பட்டு, பள்ளி வாகனங்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் கலவர வழக்கில் மாணவியின் தாய் செல்வி, விசிக கடலூர் மாவட்ட செயலாளர் திராவிடமணி உள்பட 615 பேர் மீது கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு முதல் முறையாக நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட 615 பேரில், செல்வி, திராவிடமணி, சபரிநாதன், செந்தில்முருகன் உள்பட 438 பேர் நீதித்துறை நீதிபதி ரீனா முன்னிலையில் ஆஜராகினர். 177 பேர் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை செப்.19க்கு ஒத்திவைத்து நீதிபதி ரீனா உத்தரவிட்டார்.