பள்ளி கல்வித்துறையில் உதவியாளர் பணியிடத்திற்கு நாளை கலந்தாய்வு
சென்னை: பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி சார்பில் 2024ல் நடத்திய குரூப் 2ஏ தேர்வுகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்கள்) மூலம் பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்துக்கு 160 பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணிநியமன கலந்தாய்வு நாளை (திங்கட்கிழமை) மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணைய வழியில் நடைபெற உள்ளது.
இதையடுத்து உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியில் மாவட்ட உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களில் அக்.6ல் பங்கேற்க வேண்டும். இந்த கலந்தாய்வில் கலந்து கொள்வோர் டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கடிதம் மற்றும் அனைத்துக் கல்விச் சான்றுகளின் அசல் மற்றும் சான்றொப்பமிட்ட நகல்களை சரிபார்ப்புக்கு எடுத்து வரவேண்டும்.