கூடுதல் கட்டிடம் கட்டி தராததை கண்டித்து பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
புவனகிரி : பரங்கிப்பேட்டை கும்மத் பள்ளி தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு பரங்கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பள்ளி கட்டிடத்தில் ஒன்று சேதமடைந்ததால் இடிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக புதிய பள்ளிக் கட்டிடம் இதுவரை கட்டித் தரப்படவில்லை.
இதனால் இரண்டு வகுப்பறை கட்டிடத்திலேயே அனைத்து மாணவர்களும் படித்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டித்தரக்கோரி பள்ளி மேலாண்மைக் குழுவினர் மற்றும் பெற்றோர்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் கட்டிடம் கட்டப்படவில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தினர். அப்போது கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் அதிகாரிகள் உறுதியளித்தபடி பள்ளிக்கட்டிடம் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் நேற்று பள்ளிக்கட்டிடம் கட்டி தரப்படாததைக் கண்டித்து பள்ளிக்கு வராமல் வகுப்புகளை புறக்கணித்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்த, பரங்கிப்பேட்டை வட்டார கல்வி அலுவலர் உமாராணி பள்ளிக்கு வந்து பள்ளி மேலாண்மைக் குழுவினர் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக முடிவு எதுவும் எட்டப்படவில்லை. மாணவர்கள் வராததால் பள்ளி வளாகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.