குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 மாணவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை: புதுச்சேரி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
*ஆண்டுதோறும் அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் மழைக்கால நிவாரணமாக வழங்கப்படும்.
*வரும் நிதியாண்டு முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தற்போது வழங்கப்படும் இலவச அரிசியோடு சேர்த்து 2 கிலோ கோதுமையும் இலவசமாக வழங்கப்படும்.
* விடுபட்ட மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும். வாரத்தில் 2 நாட்கள் என்பதை மாற்றி தினமும் மாலை நேரத்தில் சிறுதானிய சிற்றுண்டி மற்றும் முட்டை வழங்கப்படும்.
*மருத்துவம், பொறியியல் பாடப்பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட சென்டாக் உயர்கல்வி நிதி, இனி அனைத்து பாடப்பிரிவுகளுக்கு வழங்கப்படும்.
*6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்குவிப்பு தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
*எவ்வித உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டிற்குகீழ் வாழும் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1,000 உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூலம் ஓய்வூதியம் பெறும் அனைத்து தரப்பினருக்கும் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும்.
*மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ.4000, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ரூ.5 ஆயிரம், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ரூ.6 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும்.
*இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.5 ஆயிரம், உதவித்தொகை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
*ஆதி திராவிடர், பழங்குடியின சமூகத்தில் 30வயது கடந்து திருமணம் ஆகாத, கணவரை இழந்த வேலையற்ற மகளிருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் நிதி வேலைக்கு செல்லும் வரை வழங்கப்படும்.
*ஆதி திராவிட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த முதியோர், விதவை, முதிர்கன்னி, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் முதியோர் ஓய்வூதியத்துடன் ரூ.500 கூடுதலாக வழங்கப்படும்.
*தாய், தந்தை இருவரையும் இழந்த ஆதி திராவிட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு 18 வயது முடியும் வரை கல்வி, அடிப்படை தேவைகளுக்காக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்று உள்ளது.