பட்டியல் சாதி பிரிவை சேர்ந்த சுமார் 60 மாணவர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: அமைச்சர் வீரேந்திர குமாருக்கு கனிமொழி எம்.பி கடிதம்
கடந்த ஆண்டும், ஜூன் 2023 சுழற்சிக்கான பட்டியலில் தகுதியான சிலர் விடுபட்டபோது, 44 மாணவர்களுடன் கூடுதல் பட்டியல் வெளியிட்டது. ஆனால் இந்த ஆண்டு தகுதி வாய்ந்த மாணவர்களின் கூடுதல் பட்டியலை வெளியிடுவதற்கு பதிலாக கடந்த ஏப்ரல் மாதம் தேசிய பட்டியல் சாதியினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தால் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டது. இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த பேரின் எண்ணிக்கை 865 இருந்து 805-ஆக குறைக்கப்பட்டது. மார்ச் மாதம் தேசிய பட்டியல் சாதியினருக்கான பெல்லோஷிப் வழங்கப்பட்ட பட்டியல் சாதி பிரிவை சேர்ந்த சுமார் 60 மாணவர்கள், திருத்தப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட 487 பேர் திடீரென்று விளக்கம் இல்லாமல் தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டனர். இது அவர்களுக்கு கடுமையான மன உளைச்சலையும், நிதி சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த மார்ச் மாத முடிவுகளின் அடிப்படையில் பலர் ஏற்கனவே பி.எச்.டி படிப்புகளில் சேர்ந்தனர். தற்போது இந்த தன்னிச்சையான மாற்றத்தால் அவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.எனவே காலியிடங்களின் அசல் எண்ணிக்கையை 865 ஆக மீண்டும் உயர்த்த நடவடிக்கை எடுத்து கடந்த ஆண்டை போலவே 60 மாணவர்களை கொண்ட கூடுதல் பட்டியல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.