தகுதியில்லை என்ற வார்த்தையை பயன்படுத்தி தகுதியான எஸ்.சி, எஸ்.டி பேராசிரியர்களிடம் பாரபட்சம்: நாடாளுமன்ற நிலைக்குழு கடும் கண்டனம்
புதுடெல்லி: பல்கலைக்கழகங்களில் தகுதியான தலித், பழங்குடியின ஆசிரியர்களுக்கு தகுதியில்லை என முத்திரை குத்தி வாய்ப்பு மறுக்கும் நடைமுறைக்கு நாடாளுமன்ற நிலைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் (எஸ்.சி, எஸ்.டி) பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அவர் வெளியிட்ட பதிவில், ‘தகுதி இல்லை என்ற புதிய முறையை பயன்படுத்தி, மத்திய பல்கலைக் கழங்களின் கல்வி மற்றும் தலைமைப் பொறுப்புகளில் இருந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் திட்டமிட்டு வெளியேற்றப்படுகின்றனர்.
தகுதி இல்லை என்பதே தற்போதைய புதிய மனுவாதம்’ என்று அவர் பதிவிட்டது பெரும் விவாதத்தை கிளப்பியது. இதற்கு பதிலடி கொடுத்த பாஜக தலைமை, பிற்படுத்தப்பட்ட மக்களை காங்கிரஸ் ஓரங்கட்டுவதாக குற்றம்சாட்டியது. இந்த அரசியல் விவாதங்களுக்கு மத்தியில், பாஜகவைச் சேர்ந்த எம்.பி பக்கன் சிங் குலாஸ்தே தலைமையிலான எஸ்.சி, எஸ்.டி. நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, தனது அறிக்கையை நாடாளுமன்றத்தின் நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்துள்ளது.
டெல்லி பல்கலைக்கழக நியமனங்கள் குறித்த ஆய்வின்போது, எஸ்.சி, எஸ்.டி. பேராசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு, அவர்களை (எஸ்.சி, எஸ்.டி) தகுதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியில்லை என்ற வார்த்தையை பயன்படுத்தி, தகுதியான எஸ்.சி, எஸ்.டி. ஆசிரியர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை மறுப்பதை இந்த குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இது முறையற்றது மட்டுமல்லாமல், தகுதியான மற்றும் நன்கு பயிற்சி பெற்ற எஸ்.சி, எஸ்.டி. விண்ணப்பதாரர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது.
இன்றைய காலகட்டத்தில், கற்பித்தல் துறைகளில் சிறப்பான நற்சான்றுகளைக் கொண்ட தகுதியான எஸ்.சி, எஸ்.டி. விண்ணப்பதாரர்களுக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை. எனவே, பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்.சி, எஸ்.டி. விண்ணப்பதாரர்கள், அவர்களின் கல்வித் திறமையின் அடிப்படையில் மட்டுமே மதிப்பிடப்பட வேண்டும். கடுமையான விதிமுறைகள், தேர்வுக் குழுவின் சிறந்த முடிவை எடுப்பதற்கு தடையாக இருக்கக்கூடாது. எஸ்.சி, எஸ்.டி. விண்ணப்பதாரர்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் மற்றும் அவர்களின் தொழில்முறை இலக்குகளை அடைய உதவ வேண்டும்’ என்றும் அந்த குழு வலியுறுத்தியுள்ளது.