சாவர்க்கர் குறித்து புதிய மனு தாக்கல்; ராகுல் பிரதமராக போகிறாரா?.. குறுக்கு கேள்வி கேட்டு மடக்கிய நீதிபதி
மும்பை: ராகுல்காந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையின் போது, ‘ராகுல் பிரதமராகப் போகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்று மனுதாரர் வக்கீலிடம் நீதிபதி குறுக்கு கேள்வி கேட்டு மடக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவினரால் கொண்டாடப்படும் வீர சாவர்க்கர் குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். குறிப்பாக, ‘சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர்’ என்று அவர் கூறிவந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, சாவர்க்கரின் கொள்ளுப் பேரன் சத்யகி சாவர்க்கர், புனே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணை தற்போது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், ‘அபினவ் பாரத் காங்கிரஸ்’ என்ற அமைப்பின் நிறுவனர் பங்கஜ் ஃபட்னிஸ் என்பவர், மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புதிய மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி தவறான கருத்துக்களைப் பரப்பி குழப்பம் விளைவிக்கிறார். அவர் பிரதமரானால் நாட்டில் பெரும் கலவரம் வெடிக்கும்’ என்று மனுதாரர் தரப்பில் விநோதமான வாதம் முன்வைக்கப்பட்டது. இதைக் கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதிகள், ‘ராகுல் காந்தி நாட்டின் பிரதமராகப் போகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்று மனுதாரரிடம் குறுக்குக் கேள்வி எழுப்பி அவரது வாதத்தை நிராகரித்தனர். மேலும், இதுதொடர்பாக ஏற்கனவே புனே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.