சவுதி புதிய கிராண்ட் முப்தி நியமனம்: பிரசிடெண்ட் அபூபக்கர் வாழ்த்து
சென்னை: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சவுதி அரேபியாவின் புதிய மூத்த முப்தியாக ஷேக் சலேஹ் பின் பவ்சான் அல் பவ்சான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று சவூதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் பரிந்துரையின் அடிப்படையில் மன்னர் சல்மான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு முன் கிராண்ட் முப்தி பதவியை வகித்த ஷேக் அப்துல் அஜீஸ் பின் அப்துல்லா அல்ஷேக் கடந்த செப்டம்பர் மாதம் காலமானதை தொடர்ந்து புதிய முப்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
1935ம் ஆண்டு பிறந்த இவர் நபிகள் நாயகம் வழியில் குர்ஆன் வழியில் மிகவும் நம்பிக்கை கொண்டு பயணிப்பவர். இஸ்லாமியர்களின் புனித பயணமான ஹஜ் பயணத்தில் இவரது உரைகள் மிகவும் கவனிக்கத்தக்கவை. 2026ம் ஆண்டு ஹஜ் பயணத்தில் இவரது இனிய குரல் ஒலிக்கும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம். இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.