சவுதியில் தேசத்துரோக வழக்கில் கைதான பத்திரிகையாளருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!!
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் அல்-ஜாஸ்ஸார் கடந்த 2018ம் ஆண்டு தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து கம்ப்யூட்டர், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர் மீது கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கு தொடா்பாக விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை. இவர் கைதாகி சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்-ஜாஸ்ஸருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனிடையே நியூயார்க்கில் உள்ள ஊடகவியலாளர் பாதுகாப்புக்குழு இந்த விவகாரம் தொடர்பாக கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
பத்திரிகையாளர் அல்-ஜாஸ்ஸார் 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் சவுதி அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பதிவுகளை வெளியிட்டு வந்தார் என்று கூறப்படுகிறது. இது குறித்து சி.பி.ஜே. அமைப்பின் தலைவர் கார்லஸ் மார்ட்டினெஸ் கூறுகையில், பத்திரிகையாளர் ஜமால் கசோகி கடந்த 2018ம் ஆண்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சர்வதேச சமுதாயம் நீதி வழங்க தவறிவிட்டது. இதனால் இளவரசர் முகமது பின் சல்மான் பத்திரிகையாளர்கள் மீதான அடக்குமுறையை தொடர்ந்து வருகிறார் என்று கூறியுள்ளார்.