சாத்தூர் அருகே அதிகாலை பரபரப்பு; தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ: ரூ.25 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
சாத்தூர்: சாத்தூர் அருகே, இன்று அதிகாலை தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீயில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள பெரியார் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார் (38). இவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை மேட்டமலை ஊராட்சி, மடத்துக்காடு கிராமத்தில் உள்ளது. இங்கு தீக்குச்சி, தீப்பெட்டி ஆகியவற்றை இயந்திரத்தால் தயாரித்து வந்தனர். ஆலையில் 5க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று இரவு வழக்கம்போல வேலை முடிந்து தொழிலாளர்கள் ஆலையைப் பூட்டிச் சென்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் ஆலையின் முன்பு கிடந்த கழிவு தீக்குச்சிகளில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென தொழிற்சாலைக்குள் இருந்த பொருட்களில் பரவி பற்றி எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் உரிமையாளர் அருண்குமார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சாத்தூர், சிவகாசியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலையில் இருந்த இயந்திரம், தீக்குச்சிகள், மூலப்பொருட்கள் என ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். அதிகாலை நேரம் என்பதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.