சாத்தூர் அருகே இருக்கன்குடி அணையை சீரமைக்க வேண்டும்
* விவசாயிகள் கோரிக்கை
சாத்தூர் : சாத்தூர் அருகே, புதர்மண்டிக் கிடக்கும் இருக்கன்குடி அணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் அருகே, மொத்தம் 24 அடி கொள்ளளவு கொண்ட இருக்கன்குடி அணை உள்ளது.
இந்த அணையில், முழு கொள்ளளவிற்கு தண்ணீர் தேக்கப்பட்டால், நல்லான்செட்டிபட்டி, சிறுக்குளம் உள்பட சில கிராமங்களுக்குள் தண்ணீர் புகும் என்பதால் 22 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த அணையை முறையாக பராமரிக்காததால், அணை நீர்த்தேக்க பகுதியில் சீமைக்கருவேல் மரங்களும், முட்செடிகளும் வளர்ந்துள்ளன. நீர் வழிந்தோடும் மதகுப்பகுதியில் வாகை மரம், சீமைக்கருவேல மரங்களும் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது.
இதனால் நீர்த்தேக்க பகுதியில் போதிய தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஆகையால் நீர்த்தேக்க பகுதியில் உள்ள சீமைக்கருவேல் மரங்களையும், முட்செடிகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பொழுது போக்கிற்கு பூங்கா மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கவும், அணையை பராமரித்து படகு சவாரி விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.