சத்தியமங்கலம் அருகே மலைக்குன்றில் பதுங்கிய சிறுத்தையை பிடிக்க கூண்டு: பொதுமக்கள் நிம்மதி
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே மலைக்குன்றில் பதுங்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் நடமாடும் சிறுத்தைகள் அருகில் உள்ள கிராமங்களில் நுழைந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை சத்தியமங்கலம் அருகே உள்ள மாராயிபாளையம் கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் நேற்று முன்தினம் பதுங்கியது. இதை கண்ட கிராம மக்கள் மற்றும் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் சிறுத்தை மலை குன்றின் மீது படுத்திருந்ததை கண்ட பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் துப்பாக்கி ஏந்தியபடி சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். மேலும் இரவு நேரத்தில் அதிநவீன டிரோன் கேமரா மூலம் சிறுத்தை நடமாடும் பகுதியை கண்டறிந்தனர். இதை தொடர்ந்து நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் சிறுத்தை நடமாடும் மலைக்குன்று பகுதியில் வனத்துறை ஊழியர்கள் கூண்டு வைத்தனர். மேலும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பில் தானியங்கி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்ததால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.