செங்கோட்டையன் ஆதரவாளரான மாஜி எம்பி சத்தியபாமா பதவி பறிப்பு: எதையும் சந்திக்க தயார் என ஆவேசம்
கோபி: செங்கோட்டையன் ஆதரவாளரான முன்னாள் எம்பி சத்தியபாமாவின் கட்சி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதையடுத்து எதையும் சந்திக்க தயாராக உள்ளதாக சத்தியபாமா கூறி உள்ளார். அதிமுக இணைப்பு தொடர்பாக போர்க்கொடி தூக்கி உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகிய பதவிகளில் இருந்து நேற்று முன்தினம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார். மேலும் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான ஒன்றிய செயலாளர்கள் நம்பியூர் வடக்கு சுப்பிரமணியம், தெற்கு ஈஸ்வரமூர்த்தி, கோபி குறிஞ்சிநாதன், அந்தியூர் வடக்கு தேவராஜ், அத்தாணி பேரூர் செயலாளர் ரமேஷ், துணை செயலாளர் மருதமுத்து, பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், ஐடி பிரிவு துணை செயலாளர் மோகன்குமார் உள்ளிட்ட 8 பேரின் பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஈரோடு புறநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் மற்றும் அதிமுக செயற்குழு உறுப்பினருமான மாஜி எம்பி.,சத்தியபாமாவின் பதவியையும் பறித்து நேற்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். பதவி நீக்கம் செய்யப்பட்ட சத்தியபாமா, செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளராவார். செங்கோட்டையனின் செய்தியாளர் சந்திப்பு உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு வந்தார். நேற்றுமுன்தினம் செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து கோபி, நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 2000 பேர் தங்களது கட்சி பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். 2வது நாளான நேற்று கோபி நகர நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோருடன் சென்று மாஜி எம்பி சத்தியபாமா தனது ராஜினாமா கடிதத்தை கே.ஏ.செங்கோட்டையனிடம் வழங்க போவதாக அறிவித்தார். இந்த தகவல் வெளியான சில நிமிடங்களில் அவரது கட்சி பதவிகளை பறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதுகுறித்து சத்தியபாமா கூறுகையில், ‘முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோரின் பதவி பறிப்பை கண்டித்து நிர்வாகிகள் ராஜினாமா செய்து வருகின்றனர். நானும் எனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க இருந்த போது எனது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டது. அனைவரும் ஒன்றுபட்டு இயக்கத்திற்காக பாடுபட வேண்டும். அது ஒன்றுதான் எங்களது லட்சியம். ஜெயலலிதா, எம்ஜிஆர் என்ன நினைத்தார்களோ அந்த திட்டங்களை எல்லாம் தொடர்ந்து செய்வோம். நிர்வாகிகள் ராஜினாமா கடிதங்களை அனுப்பி வருகின்றனர். முதல்நாளில் நம்பியூர் நிர்வாகிகள் ராஜினாமா செய்தார்கள். 2வது நாளில் கோபி நகரம் கிழக்கு மேற்கு ஒன்றியங்களில் இருந்து நிர்வாகிகள் ராஜினமா கடிதம் அளித்து வருகின்றனர். தன்னிச்சையாக நிர்வாகிகள் அவர்களாக ராஜினாமா கடிதங்களை அளித்து வருகின்றனர். நான் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்’ என்றார்.
உளுந்தூர்பேட்டையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக போஸ்டர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரப்பகுதியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உரிமை மீட்பு குழு மாவட்ட செயலாளர் வேங்கையன் சார்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், ‘தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவோம், ஒன்றிணைவோம் வெற்றி பெறுவோம் என்ற வாசகத்துடன் கழக மூத்த முன்னோடி செங்கோட்டையன் முயற்சிக்கு நன்றி நன்றி’ என கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் படத்துடன் சசிகலா, டிடிவி தினகரன், முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், ஆனந்தன் ஆகியோருடைய படங்களும் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே, வேலூர், ராமநாதபுரத்தில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் அவரை கண்டித்தும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
செங்கோட்டையனுக்கு ஆதரவு திரளும் ஓபிஎஸ் அணியினர்
அதிமுக இணைப்பு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் வீட்டிற்கு வந்து ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஓபிஎஸ் அணியான உரிமை மீட்பு குழுவை சேர்ந்த நிர்வாகிகள் அதிக அளவில் வருகின்றனர். முதல்நாளில் ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் வந்து சென்ற நிலையில் 2வது நாளான நேற்று கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஓபிஎஸ் அணியினர் 87 வேன்களில் அணிவகுத்து வந்து செங்கோட்டையனுக்கு மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி, பூர்ண கும்ப மரியாதை அளித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் கூறுகையில், ‘முன்னாள்அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியவாறு 10 நாட்களில் அனைவரும் ஒன்றிணைவார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் தலைமை பண்பு இல்லை. செங்கோட்டையனை பதவி நீக்கம் செய்தது முறையான செயல் இல்லை’ என்றனர்.
ஆதரவாளர்களுக்கு நன்றி
பதவி பறிக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் இருந்தும் குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் அதிகப்படியான தொண்டர்கள் வந்து கொண்டுள்ளனர்’’ என்றார். முன்னதாக அவரது வீட்டிற்கு வந்த அத்தாணி பகுதியை சேர்ந்த பெண்கள், செங்கோட்டையனின் பதவி பறிப்பை ஏற்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.