செயற்கைக்கோள் மூலமாக இன்டர்நெட் இந்தியாவில் நுழைந்தது எலான் மஸ்க் நிறுவனம்
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் வணிக ரீதியாக செயல்படுவதற்கான உரிமத்திற்காக ஸ்டார்லிங்க் காத்திருக்கிறது. ஆனால், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. தற்போது எலான் மஸ்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய தொலைத்தொடர்பு துறையில் நுழைய காத்திருக்கும் அமேசானின் குய்பர் நிறுவனத்திற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. உலக அளவில் மிகப்பெரிய ஒரு மொபைல் ஆபரேட்டர் நிறுவனங்களாக விளங்கி வரும் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் போட்டுள்ளன.
தனது வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்கும் விதமான, ஏர்டெல் நிறுவனம் ஸ்டார்லிங்குடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏர்டெல் வாயிலாக வழங்கப்படும் ஸ்டார்லிங்க் சேவையால், இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவை இணைக்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனமும், அதன் வாடிக்கையாளர்களுக்கு, செயற்கைக்கோளை வைத்து உலகம் முழுக்க அதிவேக இணைய சேவையை வழங்கிவரும் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய சேவை வழங்கப்பட உள்ளது.
ஸ்டார்லிங்க் என்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸின் செயற்கைக்கோள் இணைய சேவையாகும். இது பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் வழியாக அதிவேக இணையத்தை உறுதியளிக்கிறது. இந்திய சந்தையைத் தொட்டால், ஸ்டார்லிங்க் நாட்டின் மிகவும் தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகள் உட்பட அனைத்து இடங்களுக்கும் அதிவேக இணையதள வசதியை அளிக்கும். இதற்காக ஸ்டார்லிங்க் சிறிய செயற்கைக்கோள்களின் தொகுப்பைப் பயன்படுத்துகிறது. இது பூமியில் உள்ள பயனர் முனையங்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. தற்போது, இது 6,750 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை இயக்கி, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான செயலில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிவேக, குறைந்த தாமத இணையத்துடன் சேவை செய்கிறது.