சசிகாந்த் செந்தில் ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு மாற்றம்
சென்னை: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்க கோரி உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்த காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஒன்றிய அரசு, ‘சமக்ர சிக் ஷா அபியான்’ (எஸ்.எஸ்.ஏ.) என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கக் கோரி, திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் கடந்த 29ம் தேதி காலை திருவள்ளூரில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு பார்வையாளர் கூட்ட அரங்கில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
2ம் நாள் போராட்டத்தின் போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சையில் இருக்கும் போது மருத்துவமனையில் இருந்து உண்ணாவிரதம் தொடரும் என தெரிவித்தார். இந்த நிலையில் 3வது நாளாக நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார். ஆகவே, சசிகாந்த் செந்திலின் உடல் நலம் மேலும் பாதிக்கப்படும் என்பதால், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று மதியம் சசிகாந்த் செந்திலை 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.