சரோஜாதேவி மறைவு கட்சி தலைவர்கள் நடிகர்கள் இரங்கல்
* அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி: பழம்பெரும் திரைப்பட நடிகை, `அபிநய சரஸ்வதி’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜாதேவி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பன்மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது தனித்துவமிக்க நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்தவர். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
* காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர்: திரைத் துறையில் புகழ்மிக்க நடிகையாக திகழ்ந்த சரோஜா தேவி வயது மூப்பால் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து வருந்துகிறேன். அவரது மறைவு கலைத்துறைக்கு பேரிழப்பாகும்.பிரேமலதா, அன்புமணிஉள்ளிட்ட கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
* நடிகர் ரஜினிகாந்த்: பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். இதேபோல், நடிகர்கள் சத்யராஜ், சிவகுமார், விஜய் சேதுபதி, கருணாஸ், நடிகைகள் குஷ்பு, லதா, கே.ஆர்.விஜயா, திரிஷா உள்பட திரையுலகை சேர்ந்த பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.