தலைக்கு ரூ.40 லட்சம் சன்மானம் சட்டீஸ்கர் என்கவுன்டரில் 2 நக்சல் பலி
நாராயண்பூர்: சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் தலைக்கு தலா ரூ.40லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்த 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சட்டீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில், அபுஜ்மாத் காட்டுப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வீரர்கள் அங்கு விரைந்தனர். மகாராஷ்டிரா எல்லையையொட்டி உள்ள இந்த காட்டுப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நக்சல்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அங்கிருந்த மற்ற நக்சல்கள் தப்பி ஓடிவிட்டனர். சம்பவ இடத்தில் இருந்து வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொல்லப்பட்ட இரண்டு நக்சல்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. பலியானவர்கள் ராமச்சந்திர ரெட்டி (63)மற்றும் கதாரி சத்திய நாராயணரெட்டி(67) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இருவரும் தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மவோயிஸ்ட் ) மத்தியக்குழு உறுப்பினர்கள். இருவருக்கும் போலீசார் தலா ரூ.40லட்சம் சன்மானம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய நடவடிக்கையின் மூலமாக சட்டீஸ்கரில் இந்த ஆண்டு இதுவரையில் 249 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 220 பேர் பாஸ்டர் வட்டத்தை சேர்ந்தவர்கள். 27 பேர் கரியபந்த் மாவட்டத்திலும், துர்க் வட்டத்தில் 2 நக்சல்களும் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். காட்டுப்பகுதியில் வீரர்கள் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.